தஞ்சையில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
08/01/2022
தஞ்சையில் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கிவைத்தார்.
தஞ்சை மாநகராட்சி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சோழர் கலை மன்ற தலைவர் ஏ.கே.ரவிச்சந்தர் தலைமையில் கலைஞர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த கலை நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது-
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 15 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சத்து 38 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு 17 லட்சத்து 28 ஆயிரத்து 766 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10 லட்சத்து 18 ஆயிரத்து 146 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
(சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 840 முகாம்கள் துணை சுகாதார நிலையங்கள், மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் மூலம் 1 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முகாமிற்கும் 4 பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள். தனியார் ஆஸ்பத்திரி, இந்திய மருத்துவ கழகம் செஞ்சிலுவைசங்கம் உள்ளாட்சி பணியாளர்கள் என மொத்தம் 7 ஆயிரம் பேர் பணியாற்றவுள்ளனர்.
தற்போது உலக அளவில் ஒமைக்ரான் கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்பு உள்ளதால் பொது மக்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களையும் தங்களது நண்பர்கள், உறவினர்களையும் கொரோனா நோய்தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ் குமார், நகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.