தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
10/03/2022=10=05am
கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த மூன்று மீனவர்களுடன் இந்தோனேசிய கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி இந்தோனேசிய வான் மற்றும் கடல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இந்தோனேசியாவின் ஆஷேயில் உள்ள டிட்போ லைர்ட் பியருக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அம்மீனவர்கள், அந்தமான் பதிவு எண் கொண்ட மீன்பிடி கப்பலில் மீன்பிடிக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேரடியாகத் தலையிட்டு, இந்தோனேசிய மற்றும் செஷல்ஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சினையை எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.