தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒருநபர் ஆணையத்தில் முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. ஆஜர்

28/01/2022

தூத்துக்குடி=8.25.PM

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே 34 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டு 1037 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில் துப்பாக்கிசூடு சம்பவத்தின் போது கலெக்டராக இருந்த வெங்கடேஷ், அடுத்து வந்த சந்தீப்நந்தூரி, முன்னாள் எஸ்.பி. முரளிரம்பா உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில் ஒருநபர் ஆணையத்தின் 35-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இதில் ஆஜராக, துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் நெல்லை முன்னாள் சரக டி.ஐ.ஜி.யும், சென்னை போக்குவரத்துபிரிவு ஐ.ஜி.யுமான கபில்குமார் சரத்கர், சென்னை காவலர்நலன் ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

நேற்று முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி.யும், தற்போதைய சென்னை துணை போலீஸ் கமி‌ஷனருமான (நிர்வாகம்) மகேந்திரன் ஆஜரானார். இந்நிலையில் இன்று ஒருநபர் ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன் முன்பு முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *