பொதுமக்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம் சிக்னல் முதல் முட்டுக்காடு வரையிலான சைக்கிளில் பயிற்சி மேற்கொள்ளலாம்
29/01/2022
சென்னை=9.15.PM
சென்னை பெருநகரில், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், மற்ற வாகனங்களின் இடையூறு இல்லாமல் பயமின்றி சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளவும், தகுந்த பாதுகாப்பான வழித்தடம் அமைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜுவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பு முதல் முட்டுக்காடு சந்திப்பு வரை இடதுபக்கமாக சுமார் 12 கி.மீ தூரம் வரை சைக்கிள் பயிற்சிக்காக தனிவழித்தடம் ஏற்படுத்தப்பட்டு, 25.12.2021 அன்று சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த சைக்கிள் வழித்தடத்தின் தூரத்தை அதிகப்படுத்தி நீட்டித்து தரும்படி பொதுமக்கள் கேட்டுக் கொண்டதன்பேரில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் தாம்பரம் காவல் ஆணையரக அதிகாரிகள் ஒருங்கிணைந்து கலந்தாய்வு மேற்கொண்டு, கிழக்கு கடற்கரை சாலையில், கொட்டிவாக்கம் சிக்னல் சந்திப்பிலிருந்து அக்கரை வழியாக முட்டுக்காடு சந்திப்பு வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் சைக்கிள் பயிற்சிக்காக தனிப்பாதை நீட்டித்து ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 06.01.2022 அன்று தற்காலிகமாக அமைக்கப்பட்ட வலதுபக்க தனி வழித்தடத்தில் சைக்கிள் பயிற்சி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தற்போது, தமிழக அரசு 15.02.2022 வரையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநாள் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், கிழக்கு கடற்கரை சாலையில், கொட்டிவாக்கம் சிக்னல் சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான சுமார் 20 கி.மீ. தூரம் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக தனிவழித்தடத்தில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 05.00 மணி முதல் 07.00 மணி வரையில் பொதுமக்கள் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.