போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்பட போட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறை முதலிடம்
08/01/2022
தமிழக டி.ஜி.பி. டாக்டர் சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்பேரில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தயாரித்த மவுனம் கலைவோம் என்ற தலைப்பில் அமைந்த போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
அதில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெறும் குற்றங்களை விளக்குவதாக அமைந்திருந்தது.
மேலும் பொதுமக்களிடமும், எதிர்கால இளைஞர்களிடமும் போதைபொருட்களின் தீமைகளை உணர்த்தி அவை சமுதாயத்தில் இருந்து முற்றிலும் களையப்படும் வண்ணம் செயல்படுவதை தூண்டும்படியும், ஊக்கமளிக்கும் வண்ணமும் அனைத்து பெற்றோர்களின் நன்மதிப்பை பெறும் வகையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருட்கள் கடத்துவது, விற்பனை செய்வது மற்றும் உபயோகிப்பது போன்ற செயல்களில யாரேனும் ஈடுபட்டால் பொதுமக்கள் உடனடியாக 10581 என்ற எண்ணிலோ அல்லது 9498410581 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.