மக்கள் கண்காணிப்பகம் – ஒன்றாக இணைந்து கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டிய அவசியத்தை மக்கள் கண்காணிப்பகம் வலியுருத்துகிறது

தமிழ் நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவல் உண்மையெனில் பிரதமர், தமிழ் நாடு முதல்வர், அதிகாரிகள், காவல்துறையினர், குடிமை சமூகம், வியாபாரிகள் சங்கம் ஒன்றாக இணைந்து கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டிய அவசியத்தை மக்கள் கண்காணிப்பகம் வலியுருத்துகிறது. 

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே இதன் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதிமுறைகளை விரைந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பள்ளிகள்,  நீதிமன்றங்கள் மூடப்பட்டு இணையவழியில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.  போராட்டங்கள், பொது கூட்டங்கள்   நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய முன்னெச்சரிக்கைச்  செயற்பாடுகளை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்நெறிமுறைகளை மீறும் சிலவற்றையும் சமூக அக்கறையுடன் சுட்டிக்காட்டுகிறது. பள்ளிகள் மூடப்படும் நேரத்தில் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஏன் நடத்தப்படுகின்றன?

ஒருபக்கம் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு எல்லாவற்றையும் மூடுங்கள் என்று உத்தரவிடும் அரசு மறுபக்கம்  மதுரைக்கும், தென் மாவட்டங்களுக்கும்  பிரதமர் வருகை, முதல்வர் வருகை என மக்கள் கூட்டத்தைக் கூட்ட முயற்சிப்பது முரண்பாடாக உள்ளது. ஒமைக்ரான்  தொற்று வேகமாகப் பரவுகிறது என்பது உண்மை என்றால் பெருந் திரளாய் மக்களைக் கூட்டும் அரசியல் நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக   தேவையற்ற  ஒன்றாகும். எனவே  மக்கள் கூடும் பொது நிகழ்வுகளிலும், அரசியல் நிகழ்வுகளிலும்  தமிழக முதல்வரும், அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள்  என்று அரசு வெளிப்படையாக  அறிவிக்க வேண்டும். இதே போன்று மக்களை நேரிடையாகச் சந்தித்து வாக்கு சேகரிக்கும்  நகராட்சி, மாநகராட்சி தேர்தல் பணிகளையும், இதே காரணத்திற்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கை திரும்பும்  வரைத் தள்ளிப்போடுவதில் எந்த அச்சமும், ஆளுங் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இருக்கக் கூடாது. மக்களின் உடல் நலனே நமது முக்கிய குறிக்கோளாக இருக்க  வேண்டும்.

ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் பாரதிய சனதா கட்சி சார்பில் மதுரையில்  பொங்கல் விழா கொண்டாடப்படும், அதில் பாரத பிரதமர் கலந்து கொள்வார் என்று கூறும் அதே நேரத்தில், இத்தகைய நிகழ்வு  ஒமைக்ரான் பரவலை அதிகப்படுத்தும் என்பதில் அக்கட்சியினர்க்கே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆகவே தயை கூர்ந்து அக்கட்சியின் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வைத் தடுத்து, ஒமைக்ரான் கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  

பொங்கல் விழாவின் போது பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடு பிடிப்பவர்கள், மாடு விடுபவர்கள், உள்ளூர் மக்கள், பல்துறை அதிகாரிகள் போன்றோர்க்கு மட்டும் சிறப்பு அடையாள அட்டையுடன், தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும்.  மற்றவர்கள் நிகழ்ச்சியைக் காண தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசே அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதே போன்று கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அதன் நிர்வாகிகள் தாமாக முன்வந்து கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் நடைமுறைகளைக்  கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது போல் வெளிமாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முறையான தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும்  பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் கண்டிப்பாக உறுதி செய்ய அனைத்து மாநில எல்லைகளிலும் அதிகாரிகளையும், மருத்துவர்களையும் நியமனம் செய்து தமிழ் நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை வலியுறுத்துகிறோம். இதே போன்று எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் மத நிகழ்வுகளை நடத்தும்போது கூட்டம் சேர்வதைத் தவிர்க்கும் நடைமுறையை ஒமைக்ரான் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை தாமாகவே முன் வந்து கடைப்பிடிக்க வேண்டும்.

ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றிருக்கும் மருத்துவ கல்லூரிகளை முறையாகத் திறந்து வைக்க  வருகிற  12.1.2022 அன்று  பாரதப் பிரதமர் விருதுநகர் வருகிறார் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.  இதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கான இடத்தைத்  தெரிவு செய்யும் பணியில் தமிழக அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரத பிரதமரும், தமிழ் நாடு முதல்வரும்  மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு ஒமைக்ரான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை இந்நிகழ்வுகளை ஒத்தி வைத்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பின் இந்நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

சாதரணமாக மக்கள் அதிக அளவில் கூடுகின்ற பகுதிகளில் அரசதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல் குடிமைச் சமூக அமைப்புகள், வியாபாரிகள்  (காய்கறி, பூ, ஜவுளி,மீன்) சங்கங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் போன்றவை தாமாக முன்வந்து மக்கள் அதிக அளவில் மக்கள் கூடுவதைக் கண்டிப்புடன் தவிர்க்க வேண்டும்.

முகக் கவசம் அணிதல், கிருமினாசினியால் கைகளைச் சுத்தப்படுத்துதல் போன்றவற்றைப் பயன்படுத்தும் தமிழகமாக, அரசிற்கும், காவல்துறைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பவர்களாக  அனைவரும், அனைத்துக் கட்சிகளும், குடிமை சமூகங்களும், இயக்கங்களும் இணைந்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கேட்டுக் கொள்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *