பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற 17 வயது சிறுமியின் 6 மாத கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரையில் மினி பேருந்து ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கர்ப்பமான 17 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 6 மாத கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 17 வயது மகளின் வயிற்றில் வளந்து வரும் கருவைக் கலைக்க அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் 17 வயது மகள் தினமும் மினி பேருந்தில் பயணம் செய்தபோது அந்தப் பேருந்தின் ஓட்டுநர் தங்கபாண்டி (44) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்று, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். தங்கபாண்டி மீது வாடிப்பட்டி போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். கருவைக் கலைப்பதால் சிறுமியின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மனுதாரரின் மகளின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணையை வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் விரைவில் முடித்து நீதிமன்றத்தில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *