ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குபொங்கல் பரிசு தொகுப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை அமைச்சர் காந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை, நவல்பூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,37,597 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 380 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் என மொத்தம் 3,37,977 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, ஒன்றியக்குழு தலைவர் சேஷாவெங்கட், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.