சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப்பணிகளை கண்காணிக்க துணை ஆணையாளர்கள் உட்பட உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தகவல்.
பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1066 கி.மீ. நீளமுள்ள 7,132 சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வந்தது.
பொதுவாக பருவமழை தொடங்குவதற்கு முன் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்
பணிகள் நிறுத்தப்பட்டு மழைக்காலம் முடிந்த பிறகு மீண்டும் தொடங்கப்படும். அந்த
வகையில் அக்டோபர் மாதம் 25ம் நாள் வடகிழக்கு பருவமழை தொடங்கி மாநகரின்
பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, நவம்பர்
மாதத்தில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே 20 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு
சாலைகள் சேதமடைந்தன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பருவமழையின்போது தொடர்ந்து
மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து
சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினார்கள். இதுகுறித்து
விரிவாக ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள்
பருவமழையின் காரணமாக நிறுத்தப்பட்ட சாலைப்பணிகளை மீண்டும் தொடங்கவும்,
மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளாக மாநகராட்சியின் சார்பில்
சமர்ப்பிக்கப்பட்ட சாலைகளை தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதி திட்டம்,
சிங்காரச் சென்னை 2.O மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி ஆகிய நிதி
ஆதாரங்களின்கீழ் சீரமைக்க உத்தரவிட்டார்கள்.
இதனடிப்படையில், சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின்கீழ் ரூ.37.58 கோடி
மதிப்பில் 40 கி.மீ. நீளம் கொண்ட 59 பேருந்து சாலைகள், தமிழ்நாடு நகர்ப்புற சாலை
உட்கட்டமைப்பு நிதியின்கீழ் ரூ.17.37 கோடி மதிப்பில் 13.58 கி.மீ. நீளம் கொண்ட 22
பேருந்து சாலைகள், ரூ.67.31 கோடி மதிப்பில் 117.62 கி.மீ. நீளம் கொண்ட 622 உட்புற
தார் சாலைகள், ரூ.24.92 கோடி மதிப்பில் 30.74 கி.மீ. நீளம் கொண்ட 307 உட்புற
கான்கிரீட் சாலைகள், மாநில பேரிடர் நிவாரண நிதியின்கீழ் ரூ.65.97 கோடி மதிப்பில்
110.9 கி.மீ. நீளம் கொண்ட 646 உட்புறச் சாலைகளும் அமைக்க ஒப்பம் கோரப்பட்டு
பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 30.12.2021 அன்று நள்ளிரவு
12 மணியளவில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடக் கட்டுப்பாட்டு
அறையில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக்
கூட்டத்தில் மழையால் பாதிப்படைந்த சாலைப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன்
விரைந்து முடிக்கவும், இந்தப் பணிகளை உயர் அலுவலர்களைக் கொண்டு நாள்தோறும்
ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்கள்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் பேருந்து
சாலைகள் சீரமைக்கும் பணிகள் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப்
பணிகள் நாள்தோறும் உயர் அலுவலர்களால் அவ்வப்பொழுது ஆய்வு செய்யப்பட்டு
வரும் நிலையில் அண்ணாநகர் மண்டலம், வார்டு-99க்குட்பட்ட 13 வது பிரதான
சாலையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியினை 06.01.2022 அன்று
நள்ளிரவு அரசு முதன்மை செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்
திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பணி ஆணையில் தெரிவித்துள்ளபடி பழைய சாலை
சரியான அளவில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதா (milling) எனவும், தார்க்கலவையில்
தாரின் சதவீதம் சரியான விகிதத்தில் உள்ளதா எனவும், சாலையில் மழைநீர்
தேங்காதவண்ணம் சரியான சாய்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், புதியதாக
அமைக்கப்பட்ட சாலையின் தடிமன் பணி ஆணையில் குறிப்பிட்டுள்ள அளவில் உள்ளதா
எனவும் ஆணையாளர் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும், சாலை அமைக்கும் போது
தாரின் வெப்பநிலை 120 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு இருப்பதை உறுதி செய்யவும்
சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஆணையாளர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில்
மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை துணை ஆணையாளர்கள், வட்டார
துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் பணி
நடைபெற்று வரும் இடங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு
தரக்கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு செய்ய
அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது :
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக
சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களும்
உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், ரூ.213 கோடி மதிப்பில் சுமார் 312 கிலோ
மீட்டர் நீளம் கொண்ட 1656 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் சீரமைப்பு பணிகளுக்கு
சிங்காரச் சென்னை 2.o உட்பட பல்வேறு திட்ட நிதியின் கீழ் ஒப்பம் கோரப்பட்டு
பெரும்பாலான பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீதமுள்ள பணிகளுக்கும் ஓரிரு நாட்களில் பணி ஆணை வழங்கப்படும்.
மேலும், கடந்த ஆண்டு பணி ஆணை வழங்கப்பட்ட 7,132 சாலைப் பணிகளில்
பருவமழையின் காரணமாக நிறுத்தப்பட்ட சுமார் 1,200 சாலைப் பணிகள் மீண்டும்
தொடங்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைப் பணிகள் அனைத்தையும் உடனடியாக தொடங்கி
விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சாலையின் தரம் பணி
ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு இருப்பதை உறுதி செய்ய கலந்தாலோசகர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சியின் சார்பில் துணை ஆணையாளர்கள் உட்பட
உயர் அலுவலர்களும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து தரத்தினை உறுதி செய்வார்கள்
என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர்கள் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப.,
(பணிகள்) அவர்கள், திரு. விஷு மஹாஜன், இ.ஆ.ப., (வ (ம) நி) அவர்கள்,
திரு.சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்) அவர்கள், தலைமைப்
பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.