பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஜனாதிபதியிடம் விளக்கிய பிரதமர் மோடி
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது வருத்தமளிப்பதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் சென்றபோது போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் 20 நிமிடங்களுக்கும் மேல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, பிரதமர் டெல்லி திரும்பினார்.
பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு விதிமீறல் செய்ததாகவும், திட்டமிட்டே அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு குளறுபடி குறித்தும், பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் எடுத்துரைத்தார். பாதுகாப்பு குளறுபடி குறித்து ஜனாதிபதி கவலை தெரிவித்தார்.
இதேபோல் பாதுகாப்பு குளறுபடி குறித்து பிரதமர் மோடியிடம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கேட்டறிந்தார். பிரதமருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது வருத்தமளிப்பதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.