வேலூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 189 பேருக்கு கொரோனா உறுதி
12/01/2022
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொற்று பரிசோதனையில் 189 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் பிறமாநிலத்தை சேர்ந்த 23 பேருக்கும், பிறமாவட்டத்தை சேர்ந்த 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இவர்களில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாவும் ஒருவர். கடந்த சில நாட்களாக சளி, இருமல், லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் அவர் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுபா, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று, தற்போது தொரப்பாடி காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளாார்.
இதையடுத்து பாகாயம் போலீஸ் நிலையம் மற்றும் வளாகம் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று கிருமிநாசினி தெளித்தனர். மேலும் பிளீச்சிங் பவுடர் தூவி சுகாதார பணியிலும் ஈடுபட்டனர். அத்துடன் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 16 பேருக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனைக்காக சளிமாதிரிகள் சேகரித்தனர். தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக போலீஸ் நிலையத்துக்குள் போலீசார் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் நிலையத்தின் முன்பு பந்தல் அமைத்து போலீசார் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.