வேலூர்:மூதாட்டியிடம் ரூ.2½ லட்சம் மோசடி. ரூ.65 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்

12/01/2022

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 62). கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி இவரின் செல்போனை தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் என்றும், உங்களது ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பட வைக்க ஏ.டி.எம். கார்டு குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்கும்படி கூறி உள்ளார். இதனை உண்மை என்று நம்பிய மூதாட்டி ஏ.டி.எம். கார்டு எண், ஒ.டி.பி. உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிவித்தார்.

சிறிதுநேரத்தில் மல்லிகா தனது பேத்தியின் திருமண செலவுக்காக வங்கிக்கணக்கில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வங்கிக்கு சென்று புகார் அளித்தார்.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் வழங்குப்பதிந்து முதற்கட்டமாக பணம் மாற்றப்பட்ட வங்கிக்கணக்கை முடக்கினர்.

பின்னர் அதில் காணப்பட்ட ரூ.65 ஆயிரத்தை மீட்டனர். மீதமுள்ள தொகையை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மீட்கப்பட்ட ரூ.65 ஆயிரத்தை நேற்று மல்லிகாவிடம் வழங்கினார். அப்போது சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *