அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 541 இடங்களில் 74 மாணவர்கள் இடம்பிடித்து சேலம் மாவட்டம் முதலிடம்

31/01/2022

சேலம்=07.06.AM

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களும் இடம் பெற வேண்டும் என்ற தொலைநோக்கில் அவர்களுக்கு கடந்த ஆண்டு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு வழங்கியது. அதன்படி கடந்த ஆண்டில் 436 மாணவர்களுக்கு இடம் கிடைத்தது.

புதிதாக திறக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலான இடங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் 437 எம்.பி.பி.எஸ்., 107 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 544 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது.

அதில் 541 இடங்கள் நிரம்பியநிலையில், மீதமுள்ள 3 இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, நிரப்பப்பட்டு இருக்கும் 541 இடங்களில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 74 மாணவர்கள் இடம்பிடித்து, அந்த மாவட்டத்துக்கு முதலிடத்தை பெற்றுத் தந்திருக்கிறார்கள். அதில் 51 இடங்களை அரசு மருத்துவ கல்லூரிகளில் தேர்வு செய்திருக்கின்றனர்.

அதற்கடுத்ததாக 33 இடங்களை தேர்வு செய்த தர்மபுரி மாவட்டம் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 20 இடங்களையும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் 13 இடங்களையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 31 இடங்களை பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.

அடுத்தபடியாக, 26 இடங்களை பெற்ற திருவள்ளூர் மாவட்டம், 24 இடங்களை தேர்வு செய்த திருவண்ணாமலை மாவட்டம், தலா 20 இடங்களை பிடித்த திருப்பூர், காஞ்சீபுரம், சென்னை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர். இதில் குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே ஒரு அரசு பள்ளி மாணவருக்கு மட்டுமே 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் கடும் போட்டிதான் நிலவி இருக்கிறது. வரும் ஆண்டிலும் நீட் தேர்வு இருக்கும்பட்சத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு கிராக்கி அதிகமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்துமுடிந்த நிலையில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நேற்று தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 385 எம்.பி.பி.எஸ்., ஆயிரத்து 330 பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான அட்டவணையை மருத்துவ மாணவர் சேர்க்கை குழு www.tnmedicalselection.net என்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) வரை பதிவு, கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வரையில் 3 ஆயிரத்து 824 பேர் பதிவு செய்திருக்கின்றனர். நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் விருப்ப இடங்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *