அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
08/01/2022
அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரமணசரஸ்வதி கலந்து கொண்டு இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி வெளியிடப்பட்டதில், மாவட்டத்தில் 2,61,252 ஆண் வாக்காளர்களும், 2,66,296 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவரான (திருநங்கை) 10 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,27,558 வாக்காளர்கள் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2022-ஐ தகுதி நாளாக கொண்டு, கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரையிலான காலத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கத் திருத்தம்-2022-ன் போது, அரியலூர் தொகுதியில் 4,451 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 4,953 வாக்காளர்களும் என மொத்தம் 9,404 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக அரியலூர் தொகுதியில் 1,429 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 686 வாக்காளர்கள் என மொத்தம் 2,115 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அரியலூர் தொகுதியில் 1,32,265 ஆண் வாக்காளர்களும், 1,34,182 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,66,455 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 1,32,264 ஆண் வாக்காளர்களும், 1,36,124 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,68,392 வாக்காளர்களும் உள்ளனர்.
மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் 2,64,529 ஆண் வாக்காளர்களும், 2,70,306 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,34,847 வாக்காளர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), தாசில்தார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.