அருணாசலேஸ்வரர் கோவிலில் 400 ஆண்டுகள் பழமையான நாயக்கர்கால ஓவியம் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் சுதர்சன், உதயராஜா ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில் அருணாசலேஸ்வரர் கோவிலின் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஒரு ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

இந்த ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தர, அவரின் வலது பக்கம் வள்ளியும், இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர்.

முருகர் தனது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு, தொடைவரை ஆடை அணிந்து தனது வாகனமான மயிலின் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து “சிகிவாகனராக” நீள்வட்ட பிரபையினுள் காட்சி தருகிறார். கந்தபுராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று “சிகிவாகனர்” என்பது குறிப்பிடதகுந்தது.

முருகரின் வலப்புறம் வள்ளியும், இடப்புறம் தெய்வானையும் சேதமுற்று இருப்பதால் தெளிவாகக் காணக்கிடைக்கவில்லை.

இடப்புறம் தெய்வானையின் அருகே சேடிப்பெண் ஒருவர் அக்காலத்திய உடை மற்றும் கொண்டை அணிந்து சாமரம் வீசும் காட்சி உள்ளது. அதற்கு மேல் இடப்புறம் உள்ள ஓவியம் முற்றிலும் சிதைந்துள்ளது.

அதே போல வலப்புறம் வள்ளியின் அருகே காட்டப்பெற்றுள்ள சாமரம் வீசும் சேடிப்பெண் மிகவும் சிதைந்து கால்கள் மட்டும் தெரிகிறது. அதற்கு மேல் வலப்புறமும் ஓவியம் சேதாரமாகி உள்ளது.இவ்ஓவியத்தில் சுண்ணாம்பு, கருப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.

இங்குள்ள ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ள வண்ணம் மற்றும் காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் யாவும் தஞ்சை பெரிய கோவிலின் நாயக்கர்கால ஓவியத்துடனும், ஆந்திர மாநிலம் லேபாஷி வீரபத்திரர் கோவில் ஓவியத்துடனும் ஒத்துப் போவதால் இதனை நாயக்கர்கால ஓவியமாகக் கருதலாம்.

திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுர திருப்பணி மற்றும் மதில்களில் எல்லாம் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவையே ஆகும். எனவே இவ்ஓவியத்தை 16-ம் நூற்றாண்டின் கடை பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஓட்டியதாக இதனைக் கருதலாம்.

400 ஆண்டு பழமையான இவ்ஓவியத்தை சிதைவிலிருந்து மீட்டு தமிழக தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து இதனை புனரமைத்து இவ்ஓவியத்தைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *