கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

08/01/2022

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் (2022-ம் ஆண்டு) புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1.11.2021 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 2,301 வாக்குச்சாவடிகளில் 21 லட்சத்து 46 ஆயிரத்து 960 வாக்காளர்கள் இருந்தனர். இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை, முதன்மைத் தேர்தல் அலுவலர் ஆகியோரின் அறிவுரைபடி, 1.1.2022-யை தகுதி நாளாக கொண்டு கடலூர் மாவட்டத்தில் கடந்த 1.11.2021 முதல் 30.11.2021 வரை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது. அவற்றை வாக்காளர் பதிவு அலுவலர்கள் பரிசீலனை செய்து மனுக்கள் விவரத்தை வெளியிட்டனர்.

அதன்படி வாக்காளர் பெயர் சேர்க்க 32 ஆயிரத்து 125 மனுக்கள் பெறப்பட்டதில், 31 ஆயிரத்து 683 மனுக்கள் ஏற்கப்பட்டன. 442 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நீக்குவதற்கு 9 ஆயிரத்து 407 மனுக்கள் பெறப்பட்டதில், 9 ஆயிரத்து 151 மனுக்கள் ஏற்கப்பட்டன. 256 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நேரடி விசாரணை செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டவாறும், இதர விசாரணைகளின் படியும் இறந்து விட்ட வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இறப்பு, இடம் பெயர்வு, இரட்டைப்பதிவு என 9151 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து 2022-ம் ஆண்டிற்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 21 லட்சத்து 69 ஆயிரத்து 492 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 363 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 2 ஆயிரத்து 876 பெண் வாக்காளர்கள், 253 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் டெய்சி.குமார், வருவாய் கோட்டாட்சியர் அதியமான்கவியரசு, தேர்தல் தாசில்தார் பாலமுருகன், தி.மு.க.சார்பில் நாராயண சாமி, அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், கடலூர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. பொறுப்பாளர் லெனின், நகர செயலாளர் சரவணன், பகுஜன் சமாஜ் கட்சி சுரேஷ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *