கனிமவள கொள்ளையை தடுக்க கேரள எல்லையில் சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
11/01/2022
கனிமவள கொள்ளையை தடுக்க கேரள எல்லையில் 11 இடங்களில் சிசிடிவி கேமராக்களுடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எலக்ட்ரானிக் திரையில் சிசிடிவி காட்சிகளை கண்காணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சிசிடிவி கண்காணிப்பு வசதியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கனிமவள கொள்ளையை தடுக்க கேரள எல்லையான வாளையார், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனூர், ஜமீன் காளியாபுரம், வடக்கு காடு, கோபாலபுரத்தில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டிருக்கிறது.
இதேபோல் கோபாலபுரம், மீனாட்சிபுரம், செம்மம்பதி, மாங்கரை, நடுப்பணி, ஆனைக்கட்டில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவியுடன் இணையதள இணைப்பால் 24 மணி நேரமும் தரவுகள் ஆட்சியர் அலுவலக மின்னணு திரையில் தெரியும் என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் கோவை பகுதியில் இருந்து கனிமவளத்தை வெட்டியெடுத்து கேரளத்துக்கு கடத்துவதை தடுக்க இந்த கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.