குன்னூரில் பொங்கல் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகளில் அமைச்சர் திடீர் ஆய்வு
11/01/2022
தமிழக முதல்வர்,அந்தந்த மாவட்டத்திலுள்ள அமைச்சர்களை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்து தரமான பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இதன் அடிப்படையில், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட வண்டிபேட்டை,கேஷ்பஜார், டேனிங்டன் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்புகளை தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, பொருட்கள் தரமாகவும், நல்ல நிலையிலும் உள்ளதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர்,கோத்தகிரி,கூடலூர்,பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய ஆறு வட்டங்களில் 404 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இதில் 2,20,497 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் இதுவரை, ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 916 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 72.07 சதவீதம் முடிவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் முழு முயற்சியின் காரணமாக இப்பணி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது, என்றார்.
இந்த ஆய்வின் போது, கலெக்டர் அம்ரித். வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஜோதிபாசு, மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.