குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் என் ஆர் ரவி நேரில் அஞ்சலி

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் என்.ஆர்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். ராஜ்பவனில் ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு கவர்னர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். பின்னர் அவர் காட்டேரி தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக நடந்து விபத்து நிகழ்ந்த இடத்துக்கு சென்றார்.

அங்கு விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேரின் உருவப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த உருவப்படங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து கவர்னரின் மனைவி லட்சுமி ரவி, மகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியை கவர்னர் பார்வையிட்டதுடன், விபத்து குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கவர்னர் நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு சென்றதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்ப சுப நிகழ்ச்சிக்காக ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகை, தனியார் கிளப் ஆகிய 2 இடங்களில் எத்தனை அறைகள் உள்ளன, அங்கு வசதிகள் உள்ளதா, எத்தனை பேர் தங்க முடியும் என்று நேரில் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *