கொரோனா தடுப்பூசி போடாத ஆட்டோ டிரைவர்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. எச்சரிக்கை
12/01/2022
கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி. விஜயராகவன் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை மற்றும் 5 ரோடு ரவுண்டானா பகுதிகளில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆட்டோ ஸ்டாண்டுகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட டிரைவர்களின் மொபைல் எண்களை வைத்து அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என மொபைல் ஆப் மூலம் சோதனை செய்தனர். மேலும் தடுப்பூசி போடாதவர்கள் 2 நாட்களில் போட்டுக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை ஆட்டோவின் முன்புறம் உள்ள கண்ணாடியின் இடதுபுறம் ஒட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் தடுப்பூசி போடாமல் ஆட்டோவை இயக்குவதால் தாங்கள் மட்டுமல்லாது பயணிக்கும் பயணிகளுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் எனவும், ஆட்டோவில் பயணிக்கும் அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மேலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமலும், சமூக அக்கறை இல்லாத ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், போக்குவரத்து எஸ்.ஐ.க்கள் நாராயணன், சீதாராமன் மற்றும் போலீசார் டார்வின் ரஞ்சித், முனியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.