கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு அழைப்புகள் மூலம் ஆலோசனை
11/01/2022
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்களை டாக்டர்களின் ஆலோசனைபடி வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் சென்னை மாநகராட்சியின் சார்பில் மண்டல அலுவலகங்களில் தொலைபேசி ஆலோசனை மையங்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொலைபேசி ஆலோசனை மையங்களில் 19 டாக்டர்கள் மற்றும் 129 தொலைபேசி அழைப்பாளர்கள் பணியில் உள்ளனர்.
இவர்கள் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொற்று பாதித்த நபர்களில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 பேருக்கு தொலைபேசியில் அழைத்து அவர்களின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டும். அந்தவகையில் கடந்த 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு 36 ஆயிரத்து 889 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.