கௌதம் அதானியின் முக்கிய முடிவு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரியாக்ஷன் என்ன..?
இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி கடந்த சில மாதங்களாக தனது நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரட்டி வருகிறார். இது மட்டும் அல்லாமல் NBFC நிறுவனங்களான அதானி கேபிட்டல் மற்றும் அதானி ஹவுசிங் ஆகிய நிறுவனத்தில் 90% பங்குகளை தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடல்-க்கு விற்பனை செய்துள்ளார்.
சமீபத்தில் அதானி வில்மார் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இப்படி அடுத்தடுத்து வர்த்தகத்தையும், பங்குகளையும் விற்பனை செய்து வரும் அதானி குழுமத்தில் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமாக இருக்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் கௌதம் அதானி தலைமையிலான ப்ரோமோட்டர் குரூப் முதலீடு செய்து மொத்த பங்கு இருப்பை 67.65 சதவீதத்தில் இருந்து 69.87 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஹின்டன்பெர்க் விவகாரத்திற்கு பின்பு பங்கு மதிப்பில் தொடர்ந்து பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்த பங்கு இருப்பில் ஏற்பட்ட உயர்வு முதவீட்டாளர்கள் மத்தியில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குரூப் நிறுவனமான Kempas Trade and Investment Ltd மிகவும் குறைந்த அளவிலான பங்குகளை மட்டுமே வைத்திருந்த நிலையில் ஆகஸ்ட் 7 முதல் 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் திறந்த சந்தையில் இருந்து 2.22 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. சமீப காலமாக GQG பார்ட்னர்ஸ் அதானி குழுமத்தில் தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது.
அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 2,639.75 ரூபாய்க்கு முடிந்த நிலையில் இன்று 2.72 சதவீதம் உயர்ந்து 2711 ரூபாய் வரையில் காலை வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது.