சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு – அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என, தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டசபையின் நேற்றைய நிகழ்வுகள் தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை, யூ-டியூப் சேனலிலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
அதேபோல், துார்தர்ஷன் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. சட்டசபையில் இன்று நடக்கும் கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது வரவேற்கத்தக்கது என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டப்பேரவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் நேரடியாக அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை ஆண்டுக்கு 4 முறை மொத்தம் குறைந்தது 100 நாட்கள் நடைபெற வேண்டும் என்றும் பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரடியாக ஒளிபரப்பட வேண்டும் என்று முதன்முதலில் வாக்குறுதி அளித்ததும், வலியுறுத்தியதும் பா.ம.க. தான். என்ற வகையில் கேள்வி நேர நேரலை மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்யவும், அதற்காக தனி தொலைக்காட்சி தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.