சென்னை புறநகர் ரயில்களில் தடுப்பூசி சான்று இல்லாத 2,177 பேருக்கு அனுமதி மறுப்பு
11/01/2022
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 31 ஆம் தேதி வரை மின்சார ரெயில்களில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் என்றும் டிக்கெட் பரிசோதகர் கேட்கும் போது 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் முக கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் இந்த புதிய கட்டுப்பாடுகள் 10 ஆம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் 2 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாத 2,177 பேருக்கு நேற்று ரெயில்களில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.