சென்னை மாநகராட்சிக்கு 334 வயதாகிறது
28/01/2022
சென்னை=7.20.PM
சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நதநில் ஹக்கின் சன்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
உலகில் உள்ள மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சி தனி பாரம்பரிய சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.
சென்னை மாநகராட்சி உலகின் 2-வது பழமையான மாநகராட்சியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு 334 வயது ஆகிறது.
சென்னை மாநகராட்சி தொடங்கப்பட்டபோது சென்னை நகரை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியினர் ஆட்சி செய்து வந்தனர். அந்த சமயத்தில் சென்னை சிறு சிறு கிராமங்களின் கூட்டமைப்பாக இருந்தது.
சென்னை மக்களுக்கு ஆட்சி அதிகாரம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று 1687-ம் ஆண்டு சர் ஜோசைய்யா சைல்டு என்பவர் இங்கிலாந்து அரசருக்கு கடிதம் எழுதினார். அதை ஆய்வு செய்த இங்கிலாந்து மன்னர் 2-ம் ஜேம்ஸ் சென்னையில் மாநகராட்சி அமைப்பை உருவாக்க சம்மதித்தார்.
இதையடுத்து ஜேம்ஸ் அரசரின் அறிவிப்பின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 1688-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி சென்னை மாநகராட்சி உதயமானது.
சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நதநில் ஹக்கின் சன்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவருடன் 3 தமிழர்களும் மாநகராட்சி நிர்வாக பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இடையில் சிறிது நாட்கள் சென்னை மேயர் பதவியை பிரசிடெண்ட் என்று அழைத்தனர். 1933-ம் ஆண்டு முதல் மீண்டும் மேயர் பதவி என்று அழைக்கப்பட்டது.
1972-ம் ஆண்டு “மஸ்டர் ரோல்” ஊழல் காரணமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடக்கப்பட்டது. மீண்டும் 1996-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவியை 2 ஆங்கிலேயர்கள் 2 தடவை வகித்துள்ளனர். தமிழர்களில் எம்.ஏ. முத்தையா செட்டியார் 2 தடவை மேயராக இருந்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு 1913-ம் ஆண்டு ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. 252 அடி நீளம், 126 உயரத்துடன் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. ரூ.7.5 லட்சம் செலவில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்ததாக சொல்கிறார்கள்.