சேலம் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
11/01/2022
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 100-யையும் தாண்டி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் முன்களபணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார். இதில் டாக்டர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் அந்த முகாமில் கலந்து கொண்ட வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பணி குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தினமும் அனைத்து பணிகளிலும் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 25 சுகாதார பணியாளர்கள், 18 ஆயிரத்து 192 முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 24 ஆயிரத்து 807 முதியவர்கள் என மொத்தம் 58 ஆயிரத்து 24 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள்.
2-ம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிந்துள்ளதா? என சோதனை செய்து அதன்பிறகு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. முதல் மற்றும் 2-ம் தவணை எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ? அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆக செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நளினி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.