சேலம் வழியாக சென்ற 2 ரெயில்களில் 26½ கிலோ கஞ்சா பறிமுதல்
08/01/2022
சேலம் வழியாக சென்ற 2 ரெயில்களில் 26 ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 17230) நேற்று அதிகாலை 4.10 மணி அளவில் சேலம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த ரெயிலில் ஏறி ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். இதில் எஸ்-7 முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்த 2 முதியவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த 2 முதியவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி (வயது 64), இருளப்பன் (61) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விசாகப்பட்டணம்-கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 18657) நேற்று மதியம் 12.10 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. இதையடுத்து அந்த ரெயிலில், ரெயில்வே போலீசார் ஏறி சோதனை நடத்தினர். அப்போது டி-5 என்ற முன்பதிவு செய்த பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 2 பைகளை எடுத்து போலீசார் சோதனை செய்தனர். அதில் 5½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அதை போலீசார் மீட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.