தருமபுரி அருகே ரேசன் கடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
12/01/2022
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் முழு நீள கரும்புடன் 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தரம் குறைவாக உள்ளதாகவும், ஒரு சில பொருட்களின் எடை குறைவாக உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது.
இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், எடை அளவு குறையாமலும் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொருட்டு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி மற்றும் ராஜாப்பேட்டை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பரிசோதனை செய்தார். பொருட்களின் தரம் மற்றும் எடை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர்களிடம், பொங்கல் பரிசு தொகுப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.