தர்மபுரி மாவட்டத்தில், 4 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம் கலெக்டர் நேரில் ஆய்வு
08/01/2022
தர்மபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மையங்களை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஆங்காங்கே பரவி பொது மக்களை பீதி அடைய செய்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைவான எண்ணிக்கையிலேயே உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கை கழுவ வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரி, நல்லனூர் ஜெயம் பொறியியல் கல்லூரி, கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
\
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரூர், பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட தாலுகா மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது அவை அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் கலெக்டர் திவ்யதர்சினி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மையங்களில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவள்ளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் காந்தி, தாசில்தார்கள் ராஜராஜன், சுப்பிரமணி, கனிமொழி மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள், டாக்டர்கள் உடனிருந்தனர்.