தலைநகர் டெல்லியில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு பாதிப்பு உறுதி

11/01/2022

டெல்லியில் 1,000-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.

மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. இதில், தலைநகர் டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இருந்தபோதிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போது வரை ஏதும் இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி, கூடுதல் ஆணையர் சின்மோய் பிஷ்வால் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து டெல்லியில் அனைத்து காவலர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையின் போது அதாவது கடந்த மார்ச் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பை காட்டிலும் தற்போது தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், டெல்லி சிறையில் 66 கைதிகள், சிறை ஊழியர்கள் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திகார் சிறையில் 42 கைதிகளுக்கும், 34 சிறை ஊழியர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *