திருப்பூரில் பல்லடம் சாலையில் பொதுமக்கள் சாலைமறியல்

28/01/2022

திருப்பூர்=7.15.PM

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள டி.கே.டி மில் பகுதியில் திருவள்ளுவர் நகர், வாய்க்கால் மேடு, கெம்பே நகர், ஏ.பி .,நகர், செல்வி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப்பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் என அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் தங்கள் பகுதியை புறக்கணித்து வருவதாக கூறி இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் திருப்பூர் பல்லடம் ரோட்டில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து எங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வதாக கூறினர்.

சிறிது நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் வந்து உங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல்லடம் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் காரணமாக இரண்டு புறங்களிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *