திருப்பூர் மாவட்டத்தில் இறுதி 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர்
திருப்பூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 35,457பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத் தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றார்கள்.
கடந்த 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய அட்டவணைப்படி 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி 38 ஆயிரத்து 327 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 924 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 497 பேருக்கு திருத்தம் செய்யப்பட்டள்ளது. ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் 5 ஆயிரத்து 873 பேருக்கு முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 512 வாக்குச்சாவடிகள் உள்ளன. 11 லட்சத்து 76 ஆயிரத்து 924 ஆண்கள், 12 லட்சத்து 12 ஆயிரத்து 381 பெண்கள், 309 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி மாவட்டத்தில் 35,457பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 318 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக மடத்துக்குளம் தொகுதியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 13 வாக்காளர்களும் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இறுதி வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் வினீத் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, தேர்தல் தாசில்தார் முருகதாஸ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.