தூத்துக்குடி மாவட்டத்தில் 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்காக மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதன்படி தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடந்தது. புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன. இதில் புதிதாக பெயர் சேர்க்க 21 ஆயிரத்து 16 மனுக்களும், பெயர் நீக்கம் செய்ய 5 ஆயிரத்து 551 மனுக்களும், திருத்தம் செய்ய 4 ஆயிரத்து 119 மனுக்களும், முகவரிமாற்றம் செய்ய 3 ஆயிரத்து 5 மனுக்களும் ஆக மொத்தம் 33 ஆயிரத்து 691 மமனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 846 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 847 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 10 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 703 வாக்காளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 24 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 47 ஆயிரத்து 993 பெண் வாக்காளர்களும், 70 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 87 வாக்காளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 565 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 187 பெண் வாக்காளர்களும், 24 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 776 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 667 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 558 பெண் வாக்காளர்களும், 4 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 229 வாக்காளர்கள் உள்ளனர்.ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 696 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 464 பெண் வாக்காளர்களும், 32 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 192 வாக்காளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 987 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 573 பெண் வாக்காளர்களும், 30 திருநங்கைகளும் ஆக மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 590 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 லட்சத்து 31 ஆயிரத்து 785 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 67 ஆயிரத்து 622 பெண் வாக்காளர்களும், 170 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 99 ஆயிரத்து 577 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 35 ஆயிரத்து 837 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
புதிதாக வாக்களார் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்படும். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் குறைவாகவே உள்ளது. இதனால் 1.1.22 அன்று 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள தேர்தல் அலுவலரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.