தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்
08-01-2022
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
டெல்டா கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய கொரோனாவான ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் துறை சார்பில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிவி.வி.டி. சிக்னல் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கினார். மேலும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆட்டோ பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,‘ கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், முககவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும். பொதுஇடங்களுக்கு வரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தற்போது 15 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்து உள்ள அனைத்து நெறிமுறைகளையும் பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகணேஷ், உதயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.