தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது
.
அனைத்து துறை அரசு அலுவலர்களும் இணைந்து செயல்பட்டு மக்களுக்கான திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவருமான கனிமொழி தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்துவதன் நோக்கம் அரசின் திட்டங்கள் அனைவருக்கும் முறையாக கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் வாய்ப்பாக உள்ளது. ஆய்வுக் கூட்டத்துக்கு வரும் அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த பணிகள் எந்த அளவுக்கு முடிக்கப்பட்டு உள்ளது. நிலுவையிலுள்ள பணிகளை எப்படி விரைவாக முடிப்பது என்பதை அறிந்து அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசின் நோக்கங்களை அறிந்து திட்டங்களை செயல்படுத்த முடியும். அனைத்து துறை அரசு அலுவலர்களும் மக்களுக்கான திட்ட பணிகளை விரைந்து செய்து முடிப்பதற்கு இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் பணியின் போது உயிரிழந்த 3 பேரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.