தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
29/01/2022
தூத்துக்குடி=9.45.PM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-
எந்தவொரு கட்சியோ அல்லது வேட்பாளரோ சாதி, மத பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடக்கூடாது. மற்ற அரசியல் கட்சிகள் மீதான விமர்சனம், அவர்களின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் ஆகியவற்றை பற்றி மட்டுமே இருக்க வேண்டும். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக்கூடாது. வாக்குகளை பெறுவதற்காக சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது.
வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக் கூடாது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை மிரட்டுவது, வாக்காளர்களை ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் பிரசாரம் செய்வது, பொதுக் கூட்டங்கள் நடத்துவது போன்றவற்றை அரசியல் கட்சியினர் கவனமாக தவிர்க்க வேண்டும்.
தனிநபர்களின் கருத்துகள் அல்லது செயல்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அல்லது அவர்களின் வீடுகளுக்கு முன்பாக மறியல் போராட்டம் நடத்துவது எந்த சூழ்நிலையிலும் மேற்கொள்ளப்படக் கூடாது. எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும், எந்தவொரு தனிநபரின் நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றில் அவரது அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் கட்டுதல், நோட்டீஸ் ஒட்டுதல், வாசகங்கள் எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
பிற கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் இடையூறுகளை ஏற்படுத்தவோ அல்லது கலைக்கவோ கூடாது. ஒரு அரசியல் கட்சியின் தொழிலாளர்கள் அல்லது அனுதாபிகள் மற்றொரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது. ஒரு தரப்பினர் கூட்டங்களை நடத்தும் இடங்களில் மற்றொரு கட்சியினர் ஊர்வலம் செல்லக்கூடாது.
பிற அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்களின் உருவப்பொம்மையை எடுத்துச் செல்வது, பொது இடங்களில் அத்தகைய உருவபொம்மையை எரிப்பது மற்றும் பிற வகையான ஆர்பாட்டம் போன்றவற்றை எந்த அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ ஏற்று நடத்தக்கூடாது.
வாக்குப்பதிவு நாளன்று அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அமைதியான மற்றும் ஒழுங்கான வாக்குப்பதிவை உறுதி செய்ய, தேர்தல் பணியில் இருக்கும் அலுவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். வாக்காளர்களைத் தவிர, தேர்தல் ஆணையத்தின் செல்லுபடியாகும் அனுமதிச்சீட்டு இல்லாத யாரும் வாக்குச்சாவடிக்குள் நுழையக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.