நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலத் தொடக்கம்…. கோயில்களில் சிறப்பு பூஜை

நவராத்திரியின் முதல் நாளையொட்டி வடமாநிலங்களின் பல்வேறு கோயில்களிலும், பக்தர்கள் சிறப்பு பூஜைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர். இன்று தொடங்கியுள்ள நவராத்திரி பண்டிகை, வரும் 15 தேதி வரையில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தேவலன் கோயிலில், அம்மன் சிலைக்கு மலர்கள் மற்றும் ஆபரணங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பே கவுரி ஆரத்தி எனும் சிறப்பு தீபாராதனையும் செய்யப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் குறைவாகவே அங்கு அனுமதிக்கப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள காளி மந்திர் ஆலயத்தில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் வந்திருந்த பலரும், அம்மனுக்கு பட்டாடைகள் மற்றும் மலர் மாலைகளை வழங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு, துணை முதலமைச்சர் அஜித் பவார் அதிகாலையிலேயே வந்து வழிபாட்டில் ஈடுபட்டார். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டு, அஜித் பவாருக்கு அங்கவஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த கோயிலில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்கர்தகள் மட்டுமே, வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே, நவராத்திரியை ஒட்டி நடைபெறும் கர்பா நிகழ்ச்சிக்காக, குஜ்ராத் மாநிலம் ராஜ்கோட்டில் பெண்கள் பலரும் நடன பயிற்சியில் ஈடுபட்டனர். உற்சாகமூட்டும் பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி விழா கொண்டாட்டத்திற்காக, பெண்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *