நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சாரத்துக்கு கட்டுப்பாடா?

நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்சார வினியோகத்தில் கட்டுப்பாடு வராது,” என, மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு நாடு முழுதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு தேவையான அளவுக்கே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இது குறித்து மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியதாவது: நிலக்கரியை கையாள்வதில் சில பிரச்னைகள் உள்ளன என்பது உண்மை தான். மழையின் காரணமாக, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நிலக்கரி எடுத்துச் செல்ல முடியவில்லை.

தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. நிலக்கரியின் தேவை குறித்து துறைச் செயலர் தலைமையிலான சிறப்பு குழு தினமும் கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்தாண்டு இதே நாளில் இருந்த தேவையைவிட தற்போது, 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அதிகம் தேவைப்படுகிறது. இது நல்ல விஷயம்தான். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதையே இது காட்டுகிறது.

நாட்டின் மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரி வாயிலாகவே கிடைக்கிறது. நம்மிடம் போதிய அளவில் நிலக்கரியும் உள்ளது. சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுத்து, மின் உற்பத்திக்கு அனுப்புவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.தற்போதைய நிலையில் மின்சாரத்துக்கு எந்த சிக்கலும் ஏற்படாது. அதனால் வினியோகத்தில் கட்டுப்பாடு தேவையில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிலக்கரி தட்டுப்பாடு நீங்கி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *