பட்ஜெட்டில் குமரி மாவட்ட நடப்பு ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?

29/01/2022

கன்னியாகுமரி=8.43.PM

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சுமார் 18 லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் அதிக கல்வியறிவு நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு அரசு, அரசு சாந்ந்த அல்லது தனியார் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத காரணத்தால் இங்கு உள்ள மக்கள் வெளிஊர்களில் வேலைபார்ப்பது என்பது இந்த மாவட்டத்தின் உள்ள மக்களின் தவிர்க்க முடியாதநிலை ஆகும். இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரயில் வசதி என்பது மிகவும் அத்தியவாசியமான கோரிக்கை ஆகும். புதிய ரயில்கள் விடுதல் போன்ற பல்வேறு ரயில்வே வளர்ச்சி பணிகள் என்பது இந்த மாவட்டத்தின் மொத்த வளர்;சியாக கருதப்படுகிறது. இந்தியாவின் கடைசி எல்லையான குமரியிலிருந்து ஓர் ரயில் இயக்கப்பட்டால் இந்த ரயில்தான் தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கும் நேரடியாக பயன்படும் படியாக இருக்கிறது. குமரி மாவட்ட மக்களுக்கு கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் சுமார் 70 கி.மீ அருகில் இருந்தாலும் 750 கி.மீ தூரம் கொண்ட சென்னை தான் தங்கள் மாநிலத்தின் தலைநகர் ஆகும். ஆதலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும்படியாக திருநெல்வேலி, மதுரை மார்க்கம்தான் அதிக ரயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அதிக ரயில்கள் இயக்க வேண்டுமானால் ரயில் நிலையங்களை விரிவாக்குதல், புதிய முனைய வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை செய்தால் மட்டுமே அதிக ரயில்கள் இயக்க முடியும்.

நாகர்கோவில் – மதுரை இரட்டை இருப்புப்பாதை பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை;.

     தென்மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாகவே கன்னியாகுமரி – மதுரை வரை உள்ள பாதையை இருவழிபாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையையேற்று ரயில்வே நிர்வாகம் 2015-16 ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் மதுரை – கன்னியாகுமரி வழித்தடம் இருவழிபாதையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்படடது. அதன்படி மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் 87 கி.மீ தூரம் ஒரு திட்டம் என மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் பல்வேறு காரணங்களுக்காக பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றது. இதுவரை திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கத்தில் ஒரு கி.மீ தூரம் கூட இருவழிபாதை பணிகள் நிறைவுபெற்று பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. பெப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.

நாகர்கோவில் ரயில் நிலையம் விரிவாக்கம்;:-

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 60 கோடிகள் வருமானம் உள்ள என்எஸ்;ஜி-3 வகைரயில்நிலையம் ஆகும். திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவில் ரயில் நிலையம் வழியாக குறைந்த அளவில் ரயில்கள் இயக்கி குறைந்த பயணிகள் பயணம் செய்து அதாவது தினசரி சராசரி ஒரு நாள்; 7583 பயணிகள் பயணம் செய்து அதிக வருவாய் 60 கோடிகள் ஈட்டி கோட்டத்திலே முன்னனி ரயில் நிலையமாக திகழ்கின்றது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்திவைக்கவும், பராமரிப்பு செய்யவும் கூடுதல் வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதிய நடைமேடைகள் இல்லாத காரணத்தால் நாகர்கோவிலுக்கு வரும் ரயில்கள் ரயில்நிலையத்துக்கு வெளியே சிக்னல் கிடைக்காத காரணத்தால் அதிக நேரங்கள் சுமார் அரை மணி முதல் ஒரு மணிவரை நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளை அவதிக்குள்ளாக்குகிறது ரயில்வேதுறை. குறிப்பாக திருநெல்வேலி மார்க்கத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரயில்கள் நடைமேடை காலியாக இல்லாத காரணத்தால் வெளியே தோவாளை ரயில் நிலையம் தாண்டியவுடன் அவுட்டர் சிக்னலில் நிறுத்தி வைக்கப்பட்டு, நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் பயணிக்கும் ரயில்கள் புறப்பட்டு சென்ற நடைமேடை காலியான பிறகே அந்த ரயில்கள் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு வருகின்ற காரணத்தால் மேற்கு மாவட்டத்தில் உள்ள பயணிகள் இணைப்பு ரயிலாக எந்த ஒரு ரயிலையும் பயணிக்க முடியாதநிலை உள்ளது.

முனைய விரிவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக 625 மீட்டர் அதாவது 26 பெட்டிகள் கொண்ட நடைமெடைகள் இரண்டு அமைக்கப்பட இருக்கின்றது. இந்த நடைமேடை தற்போது ஸ்டேபளிங் லைன்கள் உள்ள பகுதியில் உள்ள நான்கு ஸ்டேபளிங் லைன்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் புதிதாக நடைமேடை அமைய உள்ளது. இது மட்டுமில்லாமல் தற்போது உள்ள நடைமேடை மூன்று எண்ணிக்கையும் 26 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு நீளம் அதிகரிக்கப்பட இருக்கின்றது. இவ்வாறு பணிகள் நிறைவு பெற்றால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைமேடை 1ஏ யும் சேர்த்து ஆறு நடைமேடைகள் ( 3+1+2=6) பயணிகள் பயன்பாட்டிற்காக இருக்கும். இந்த திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பிட்லைன்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களின் பெட்டிகளுக்கு அடிப்பக்கத்துக்கு கீழே போய் பிரேக், வீல்,ஷாக் அப்சர்வர் (shock absorber) மற்ற ஆய்வு மற்றும் வழக்கமான பராமரிப்பு வேலை செய்வதற்கு என தற்போது 24 பெட்டிகள் நீளம் கொண்ட இரண்டு பிட்லைன்களும் 18 பெட்டிகள் கொண்ட ஒரு பிட்லைன்களும் என மொத்தம் மூன்று பிட்லைன்கள் உள்ளன. இந்த பிட்லைன்களின் எண்ணிக்கையை பொறுத்தே புதிய நெடுந்தூர ரயில்கள் இயக்கப்படும். அதிக பிட்லைன்கள் இருந்தால் அதிக ரயில்கள் இயக்கப்படும். தற்போது இந்த மூன்று பிட்லைன்களில் வைத்து தற்போது நாகர்கோவிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் பராமரிக்கப்படுகின்றன. விரிவாக்கும் திட்டத்தின் கீழ் இனி கூடுதலாக 625 மீட்டர் நீளத்துக்கு அதாவது 26 பெட்டிகள் நீளம் கொண்ட இரண்டு பிட்லைன்கள் அமைக்கப்பட இருக்கின்றது. இது மட்டுமில்லாமல் தற்போது உள்ள மூன்று பிட்லைன்களும் 625 மீட்டர் நீளத்துக்கு அதாவது 26 பெட்டிகள் நீளம் அதிகரிக்கப்பட இருக்கின்றது. இந்த பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஸ்டேபளிங்லைன்கள்:-

பராமரிப்பு முடிந்து வரும் காலிரயில் ரயில்களை அதாவது ரயில் பெட்டிகளையும், பராமரிப்பு இல்லாத ரயில்களான நாகர்கோவில் – பெங்களுர்,நாகர்கோவில் – மங்களுர், நாகர்கோவில் – சென்னை போன்ற ரயில்களை நிறுத்தி வைப்பதற்கு இந்த ஸ்டேபளின்லைன்கள் தேவைபடுகின்றது. தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நான்கு ஸ்டேபளின் லைன்கள் உள்ளன. நாகர்கோவில் விரிவாக்கும் திட்டத்தின் கீழ் இந்த நான்கு ஸ்டேபளின் லைன்கள் நடைமேடையாக மாற்றப்பட இருக்கின்றது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஒன்பது புதிய ஸ்டேபளின் லைன்கள் அமைக்கப்பட இருக்கின்றது. இதன்படி பணிகள் முடிவு பெற்றால் பழைய நான்கு ஸ்டேபளின் லைன்கள் புதிதாக ஆறு ஸ்டேபளின் லைன்கள் என மொத்தம் பத்து ஸ்டேபளின் லைன்கள் இருக்கும்.

இந்த பணிகளுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றது. வருகின்ற பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து இந்த முனைய விரிவாக்க பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் புதிதாக ரயில் முனையம் அமைத்தல்:

    இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் இயக்கபட வேண்டும். தற்போது கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகளும் ஒரு ஸ்டேபளிங் லைனும் உள்ளது. கன்னியாகுமரியிலிருற்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமானால் அதிக நடைமேடைகள் வேண்டும். இதற்காக தற்போது புதிதாக இரண்டு நடைமேடைகள் பணிகள் நடந்து வருகின்றது. இது மட்டுமில்லாமல் பழைய சுற்றுலா ரயில்களை நிறுத்தி வைக்கும் நடைமேடையின் நீளத்தையும் அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக இந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றது. ஆகவே இந்த பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து முடிக்க வேண்;டும்.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிக்கும்
பணிமனையை விரிவுபடுத்துதல்

     நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சுமார் 350 ரயில் பெட்டிகள் பராமரிக்க படுகிறது.  இந்த பெட்டிகளில் எற்படும் பழுதுகளை சரிசெய்வதற்கு என ஓர் சிறிய அளவிலான பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் ஓர் ரயில்பெட்டியை மட்டுமே நிறுத்தி பழுதுபார்க்க முடியும். ஆகவே இந்த பணிமனையை ஒரே நேரத்தில் ஐந்து பெட்டிகள் வரை பராமரிக்கும் எளவுக்கு அதன் நீளத்தை அதிகரித்து அதற்கான வசதிகளை செய்து தர வேண்டும். இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

புதிய ரயில் நிலையங்கள்:-

 குமரி மாவட்டத்தில் உள்ள பயணிகளின் நலன் கருதி சாமிதோப்பு, பார்வதிபுரம், தெங்கன்குழி போன்ற இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க வேண்டும்

நாகர்கோவில் டவுண் (பள்ளிவிளை) ரயில் நிலையம்:

   நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு குடோனை நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். நாகர்கோவில் டவுன் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை துதிரப்படுத்த இதுவரை திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மத்திய ரயில்வே அமைச்சர் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து பார்வையிட்ட போது  இந்த ரயில்நிலைய விரிவாக்கத்துக்க ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்கள். அந்த நிதியும் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கேரளாவில் உள்ள ரயில் நிலைய வளர்ச்சிக்கு மாற்றி விட்டனர். இந்த ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றும் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க  பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே முடியும். ஆகவே அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

விரிகோடு மேம்பாலம்

குழித்துறை ரயில் நிலையத்துக்கும் பள்ளியாடி ரயில் நிலையத்துக்கும் இடையே விரிகோடு என்ற இடத்தில் மார்த்தாண்டம் – கருங்கல் மாநில நெடுஞ்சாலை ரயில்வே இருப்புபாதையை கிராசிங் ஆக செல்கின்றது. இந்த இடத்தில் ரயில்கள் வரும் போது சாலையில் அதிக நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த கிராசிங்கேட் உள்ள பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக எந்த ஒரு பணியும் இன்னமும் துவங்கவில்லை. ஆகவே பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *