வந்தவாசி ரெயில் பாதை பணிக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீடு

ரெயில் பாதை பணிக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீடு

வந்தவாசி

திண்டிவனம்-நகரி அகல ரெயில் பாதை பணிக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் எனக் கூட்டத்தில் தனித் தாசில்தார் பேசினார்.

திண்டிவனம்-நகரி அகல ெரயில் பாதை திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தும் விவசாய நிலங்களின் பட்டா சரிபார்த்தல், நில அளவீடு மற்றும் நில மதிப்பீடு செய்யும் கூட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தனித் தாசில்தார் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் தனித் தாசில்தார் கிருஷ்ணசாமி பேசியதாவது:-

3 மடங்கு இழப்பீடு

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்களின் நிலங்களை ரெயில்வே பணிக்கு வழங்க வேண்டும்.

நீங்கள் கொடுக்கும் நிலங்களுக்கு நேரடியான முறையிலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் 2 வழிகளில் இழப்பீடு வழங்க கோரலாம். ஆகவே நேரடி பேச்சுவார்த்தை மூலம் இழப்பீடு கேட்டால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தற்போது அதிக இழப்பீடு தொகை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பீடு ஒரு சென்ட் ரூ.100 என்றால் ரூ.300 ஆக கொடுக்க முன் வந்துள்ளோம். அதாவது 3 மடங்கு இழப்பீடு வழங்கப்படும்.

ஆகையால் தற்போது வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சுமார் பட்டா நிலம் 498 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலம் 293 ஏக்கரும் தேர்வு செய்துள்ளோம்.

அதில் கிணறு, மரம், கட்டிடங்கள் போன்றவற்றுக்கு அதன் மதிப்புக்கு தகுந்தாற்போல் இழப்பீடு வழங்கப்படும்.

அதற்கு விவசாயிகள் கூறுகையில், நிலங்களை ெரயில் பாதை அமைக்க கொடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் எங்கள் குடும்பத்தில் படித்த யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும், என்றனர்.

கூட்டத்தில் புதிய தாசில்தார் முருகானந்தம், சமூக பாதுகாப்பு தாசில்தார் பெருமாள், துணைத் தாசில்தார் கோபால் மற்றும் சு.காட்டேரி, தெள்ளார், புலிவாய், வந்தவாசி ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *