விழுப்புரம் கலெக்டர் அதிரடி- ஆழியூரில் தகுதியற்றவர்களுக்கு வீடு பயனாளிகள் 6 பேரின் பணி ஆணை ரத்து
29/01/2022
விழுப்புரம்=8.01.PM
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடுகள் கிடைத்திட உறுதி செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயனாளிகளின் நிலைகுறித்த உண்மை நிலை மற்றும் தகுதியுள்ள பயனாளிகளா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆழியூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கடந்த 19-ந் தேதி அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது ஆழியூர் ஊராட்சிக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கு ஆழியூர் ஊராட்சிக்கு ஆதிதிராவிடர் பிரிவிற்கு 23 வீடுகளும், இதர பிரிவிற்கு 10 வீடுகள் என மொத்தம் 33 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
கள ஆய்வின்போது சித்ரா முருகன், கவுரிவேல், தெய்வ நாயகம், வரலட்சுமிசெல்வம் ஆகிய 4 பயணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இப்பயனாளிகளுக்கு உரிய விதிமுறைகளின்படி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
மேலும் பூமாகோதண்ட பாணி, சுவாமிநாதன், சுப்புராயன், பூங்காவனம், பத்ராசலம், ஆறுமுகம் ஆகிய 6 பயனாளிகளின் உண்மை நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இந்நபர்களுக்கு வீடு இருந்தும் தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கள ஆய்வின் போது கண்டறியப்பட்டன. அரசின் விதிமுறைகளின்படி வீடு இல்லாமல் தகுதியற்ற 6 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகட்டும் பணி ஆணை உடனடியாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்த அலுவலர்கள் மீது அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.