வேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூர் =11/03/2022=12=21am
வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, தெற்கு போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமைஆசிரியர் எபிநேசர் தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியர்கள் வித்யா, ஜான்பாபு, ஜெமிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் பள்ளியில் இருந்து புறப்பட்டு அண்ணாசாலை, தெற்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் தலைகவசம் உயிர்கவசம், சாலை விதிகளை பின்பற்றி விபத்தினை தவிர்ப்போம், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டாதீர், சிக்னலை மதிப்போம் என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஊர்வலத்தில் பள்ளி உடற்கல்வி இயக்குனர் சாமிபிள்ளை ஜான்சன், உடற்கல்வி ஆசிரியர்கள் அமிர்தராஜன், மைக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.