வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாத சம்பளம் வழங்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் விரைவில் தீர்வு காண்பதாக கலெக்டர் உறுதி
11/01/2022
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 மாத ஊதியம் வழங்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் 3 நாட்களில் ஊதியம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நான்கரை ஆண்டுகள் படிப்பு முடித்த மாணவர்கள் பயிற்சி டாக்டர்களாக அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ₹25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. தங்களுக்கான ஊதியத்தை மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் சரிவர பதில் கிடைக்காததால் விரக்தியடைந்த பயிற்சி டாக்டர்கள் நேற்று காலை வார்டுகளுக்கு செல்லாமல் டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோதும் சரியான பதில் இல்லை. கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க தொகையாக ₹15 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் ₹7 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். எங்களுக்கு நிறுத்தி வைத்துள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு பயிற்சி டாக்டர்கள் வந்தனர். அங்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து தங்களுக்கு 3 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், ‘3 நாட்களில் உங்கள் சம்பள பிரச்னைக்கு தீர்வு காணப்படும். நீங்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இதை பயிற்சி மருத்துவர்கள் ஏற்று வழக்கம்போல் பணிக்கு திரும்புவதாக கூறி கலைந்து சென்றனர்.