வேலூர் விரிஞ்சிபுரத்தில் பாலாற்று வெள்ளத்தால் வீடுகளை இழந்த 24 பேருக்கு புதிய வீடுகள் கலெக்டர் ஆய்வு
11/01/2022
வேலூர் விரிஞ்சிபுரத்தில் பாலாற்று வெள்ளத்தால் வீடுகளை இழந்த 24 பேருக்கு புதிய வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காமராஜர் புரத்தில் பாலாற்றின் கரையில் கட்டப்பட்டிருந்த 24 வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தற்போது தங்கி உள்ளனர். இவர்களுக்கு விரிஞ்சிபுரம் அருகே உள்ள முடினாம் பட்டு கிராமத்தில் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் ரூ.1.90 லட்சத்தில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
24 வீடுகளும் இன்னும் 3 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார். கலெக்டர் ஆய்வின் போது கே.வி.குப்பம் தாசில்தார் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.