60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிலேயே பூஸ்டர் தடுப்பூசி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

11/01/2022

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மாநகராட்சியை தொடர்புகொண்டால் வீடு தேடி சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

அதனடிப்படையில் தகுதியான 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நல மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இந்த தடுப்பூசி மையங்களின் விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் 1913, 044-2538 4520, 4612 2300 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு தங்கள் விவரங்களை பதிவு செய்தால், அவர்களின் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் 60 வயதைக் கடந்த, முதல் அல்லது 2-வது தவணை செலுத்த இருப்பவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *